Breaking News

6/recent/ticker-posts

“யாராக இருந்தாலும் முன் ஜென்ம கர்ம வினையை அனுபவித்தே தீரவேண்டும்!”

நாம் வாழுமிடம், வாழும் மனை, வாழும் குலம், வாழ்க்கைத்துணை, குரு, நோய் இவைகளெல்லாம், ஒருவனின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்று சாஸ்திரம் அறுதியிட்டுக் கூறுகிறது. 

இப்பிறப்பில், நாம் நல்லது செய்து, நல்லவராகவே வாழ்ந்தாலும், முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதற்கு, கி.பி.18ம் நூற்றாண்டில் நடந்த இந்த வரலாற்று சம்பவமே உதாரணம்.

பகவான் ஶ்ரீ கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் ‘ஸ்ரீநாராயண தீர்த்தர்’ என்ற துறவி. இவரது சீடர்கள், ஒரு நாள் ஏராளமான பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, அவரது பாதங்களில் சமர்ப்பித்தனர்.

“இவை எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன” என, ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார். அதற்கு சீடர்கள், “குருவே... காஷ்மீரி கவி என்பவர், அதிகம் படித்து விட்டோம் என்ற கர்வத்திலும், வாதப் போரில் அனைவரையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்திலும் இருந்தார். அவரை நாங்கள், வாதப்போரில் வென்று விட்டோம். தோற்றுப்போன அவர், சமர்ப்பணம் செய்த பொருட்கள் தான் இவை” என்றனர்.  

உடனே நாராயண தீர்த்தர், “இந்தப் பொருட்களையெல்லாம் காஷ்மீரி கவியிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஒருவருடைய மன வருத்தத்தால், கிடைத்த பொருள் நமக்கு வேண்டாம் “என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார். 

இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட ஶ்ரீ நாராயண தீர்த்தர், ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலியால், வேதனையை அனுபவித்து வந்தார். வலியின் வேதனை தாளாமல், தன்னுடைய வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்டு வரகூரில் அருள் புரியும் ஶ்ரீ கிருஷ்ண பகவானை நோக்கி வலி மிகுதியால் கண்ணீர் விட்டு அழுதார். 

அதன் விளைவாக, எம்பெருமான், ‘பூபதிராஜபுரம்’ எனும் திருத்தலத்தில் அவருக்கு காட்சி தந்து, “நாராயண தீர்த்தரே... நீர் முற்பிறப்பில், பத்மநாபன் என்னும் ஏழை அந்தணனாக பிறந்திருந்தாய். அப்போது, நீ சாதுக்களிடம் கொண்ட அன்பின் காரணமாக, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிக்க நினைத்தாய். அதற்காக, செல்வந்தர் ஒருவரிடம் சிறிது கடன் வாங்கி, சிறிய கடை வைத்து, அதில் அரிசி முதலான தானியங்களை விற்பனை செய்யத் துவங்கினாய். அதில் கிடைத்த லாபத்தில், நீ நினைத்ததைப் போலவே, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரித்தாய். நாட்கள் செல்லச் செல்ல, இன்னும் பெரிய அளவில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாய். அதன் விளைவாக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்கத் துவங்கினாய். அதில் கிடைத்த பணத்தில், பாகவத ஆராதனை செய்து, வாழ்ந்து, இறுதியில், உலக வாழ்வை நீத்தாய். நீ செய்த நற்செயல்களின் காரணமாக, உனக்கு இப்பிறப்பில், நற்குலத்தில் பிறப்பும், செல்வம், தெய்வ அனுக்கிரகமும் கிடைத்தன. அதே சமயம். உணவுப்பொருட்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்ற பாவத்தால், உனக்கு கடுமையான வயிற்று வலியும் வந்தது” என்றார்.

இதன் பின், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அனுக்கிரகப்படி, 'கிருஷ்ண லீலா தரங்கிணி' எனும் பாடல்களைப் பாடி, தன் வலியின் துயரம் தீர்த்துக் கொண்டார் ஶ்ரீ  நாராயண தீர்த்தர். 

இப்பிறவியில் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்தவர்கள், அதற்கு உண்டான தண்டனையை மறு பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும் என்பது நியதி….

ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அருளால் மட்டுமே, கர்ம வினையும் மசியும், துயரமும் தீரும்…..இது சத்தியம்......

கருத்துரையிடுக

0 கருத்துகள்