Breaking News

6/recent/ticker-posts

பாராளுமன்ற தேர்தல் களத்தில் அதிரும் தமிழக அரசியல் கட்சிகள்


 

 பாராளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் ஜுரம் தொற்றி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை எப்போதுமே தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் கடும் போட்டி நிலவும். காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய தேசிய கட்சிகள் எப்போதுமே இந்த 2 கட்சிகளுடன் தான் மாறி,மாறி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்தன.
ஆனால் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக அ.தி.மு.க. எந்த தேசிய கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தே.மு.தி.க.வுடன் களத்தில் உள்ளது. இந்த முறை  தேசிய கட்சியான பா.ஜனதா தனது தலைமையில் தமிழகத்தில் உள்ள பா.ம.க., தமிழமாநில காங்கிரஸ்,அம்மாமக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து போட்டியில் குதித்து உள்ளது.

வழக்கம்போல் தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள்,ம.தி.மு.க. உள்ளிட்ட  கட்சிகள் இணைந்து  இந்த தேர்தலை சந்திக்கின்றன. எப்போதும் போல் நாம்தமிழர்கட்சி தனியாக நிற்கிறது. இதனால் தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது.
ராமநாத புரம் தொகுதியில் தனது பலத்தை காட்டப்போவதாக அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வமும் களத்தில் தனியாக உள்ளார். அவரது பெயரிலேயே மேலும் 5 ஓ.பன்னனீர் செல்வங்கள் களத்தில் உள்ளதால் அங்கும் பரபரப்பு நிலவுகிறது. 

தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளநிலையில் தி.மு.க,அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் வரிந்து கட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் களத்தை சூடு ஏத்தும் விதமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்த ஆர்.டி.ஐ.அறிக்கையை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமாலை பெற்று வெளியிட்டார்.
இது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்போது முதல்& அமைச்சராக இருந்த மறைந்த கருணாநிதி இந்த விவகாரத்தில் தமிழகத்தின் நலனை பார்க்க வில்லை. கச்சத்தீவை தாரை வார்க்கும் விவகாரத்தில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் இதில் தி.மு.க இரட்டை வேடம்போடுவதாகவும் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மத்தியமந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், அமித்ஷா உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதனால் இந்த விவகாரம் பெரும் பேசும்பொருளாக மாறியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்  பா.ஜனதா கட்சியினர் மீது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினரும் குற்றம் சாட்டுகளை அடக்கினர். தேர்தல் பத்திரம், எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்தல், பழிவாங்கும் விதமாக அமலாக்கத்துறை, வருமானவரித்துறையினரை  ஏவுதல் மற்றும் தமிழகத்துக்கு தேவையான நிதியை தராமல் இருப்பது, தேர்தலில் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்காமல் இருந்தது, பெருவெள்ளத்தின் போது கண்டுகொள்ளாத பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலின்போது இதுவரை 5 முறை பொதுக்கூட்டங்கிளில் கலந்து கொண்டு பேசியது ஏன்? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். 


இந்த அரசியல் பரபரப்புக்குள் அ.தி.மு.க.வும், நாம்தமிழர்கட்சியும் ஓசையின்றி தங்களது பிரசாரத்தை திறம்பட செய்து வருகிறது. இது எந்த அளவு கைகொடுக்கும் என்று பின்னர்தான் தெரியவரும்.
மேலும் கடந்த சில நாட்களாக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும், நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது. தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பம்பரமாக அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று மக்களிடையே நேரடியாக ஓட்டுகளை சேகரித்து வருகிறார்கள்.

வரும் நாட்களில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளார். இதேபோல் ராகுல்காந்தியும் தமிழகம் வருகிறார். எனவே வரும் நாட்களில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் கோடை வெயிலை விட அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த களேபரத்தில் பல தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களின் பிரசாரம் முழுவதும் முடங்கி விட்டன. பல இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் பிரசாரம்செய்வதையே நிறுத்திவிட்டார்கள். அ.தி.மு.கவில் உள்ள உட்கட்சி பூசல் இன்னும் முடிவுக்கு வராததால் தேர்தல் களத்தில் அந்த கட்சி சற்று தள்ளியே நிற்பதாக கூறப்படுகிறது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்