பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் ராமநாதபுரம் தொகுதியில் தனது பலத்தை காட்ட போவதாக கூறி சுயேட்சையாக போட்டியிடுகிறார் .
எனினும் அவருக்கு ஆரம்பம் முதலே சிக்கல்கள் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே இரட்டை இலை சின்னம் கேட்டு அவர் தொடுத்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தர பிறப்பிக்கப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க ஓ. பன்னீர்செல்வம் பெயரிலேயே மேலும் 5 பேர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.
இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை அதிர்ச்சி அடையச் செய்தது. இதே அதிர்ச்சி அவருக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது வரை நீடித்தது.
அவர் கேட்ட வாளி சின்னத்தை மற்றொரு ஓ.பன்னீர் செல்வமும் கேட்டார்.இதனால் குலுக்கல் முறை நடந்தது. இதில் வாளி சின்னம் மற்றொரு பன்னீர் செல்வத்துக்கு சென்றது. இதனால் வேறு வழியின்றி ஓ. பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னம் கேட்டார் .அதற்கும் மற்றொரு பன்னீர்செல்வம் போட்டி யிட்டதால் குலுக்கல் முறை மீண்டும் நடந்தது. இந்த முறை ஓ.பன்னீர் செல்வதற்கு வெற்றி கிடைத்தது. இதையடுத்து அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை பரமக்குடி பகுதியில் ஓ. பன்னீர்செல்வம் உற்சாகத்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசும் போது , பெரியோர்களே தாய்மார்களே உங்கள் பொன்னான வாக்குகளை வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று எப்போதும் போல் அடுக்கு மொழி வசனத்தில் பேசினார்.
இதனைக் கேட்டு அவருடன் பிரச்சார வாகனத்தில் இருந்ததொண்டர்களும் அங்கு திரண்டு இருந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிலர் ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சை ரசித்தபடி இருந்தனர்.பின்னர் உஷாரான ஓ.பன்னீர் செல்வம் சிரித்தபடியே பழக்க தோஷத்தில் வாக்கு கேட்டேன் ,வெற்றி சின்னம் பலாப்பழத்திற்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தபடி சிரித்து சமாளித்தார்.இதனால் பிரசார கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
0 கருத்துகள்