உத்திரபிரதேச மாநிலம் பந்த்ரா மாவட்டம், ஜன்பத் பண்டாவில் உள்ள கைராடா கிராமத்தை சேர்ந்தவர் ஷிவம்(வயது21). இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவு செய்து லைக்குகளை குவித்து வந்தார்.
அவர் மற்றவர்களை விட சற்று வித்தியாசமாக மரம், தூண்களில் தலைகீழாக தொங்கியபடி உடற்பயிற்சி செய்து ரீல்ஸ் பதிவிட்டார். இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அதையே தொடர்ந்தார்.
இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள ஜுனியர் உயர்நிலைப் பள்ளிக்கு ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ஷிவம் தனது நண்பர்களுடன் வந்தார். அப்போது அவர்களுக்கு தெரியவில்லை, இது ஷிவமின் கடைசி ரீல்ஸ் என்று.
ஷிவம் பள்ளியின் மொட்டை மாடியில் கொடி ஏற்றுவதற்காக இருந்த சிறிய தூணில் தனது கால்களை பிண்ணியபடி தலைகீழாக தொங்கினார்.
மேலும் அவர் தலா ஒரு செங்ல்லை ஒவ்வொரு கையிலும் வைத்தபடி உடற்பயிற்சி செய்தார். இதன் பின்னணியில் திரைப்படத்தின் உரையாடல் ஒலித்தபடி இதனை அவரது நண்பர்கள் தங்களது செல்போனில் ரீல்ஸ் ஆக பதிவு செய்து கொண்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் திடீரென அந்த சிறிய தூண் இடிந்து விழுந்தது. இதில் ஷிவமும் தலைகீழாக விழுந்தார். அப்போது அவர் மீது சிலாப்பின் துண்டுகள் விழுந்து நசுக்கியது.
இதில் நண்பர்கள் கண்முன்னாலேயே ஷிவம் பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கதறி துடித்தனர்.
ரீல்ஸ் மோகத்தில் 21 வயதான வாலிபர் தனது உயிரை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இறந்து போன ஷிவமின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவரது தந்தை வர்தானி கூலித்தொழிலாளி ஆவார். ஷிவம்தனது குடும்பத்தை வறுமையில் இருந்து உயர்த்த கடுமையாக முயன்று உள்ளார். அவரும் ஒரு தொழிற்சாலையில் தண்ணீர் பாக்கெட்டுகளை எடுத்து வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். ஆனால் ரீல்ஸ் மோகம்அவரது உயிரை பறித்து விட்டது.
0 கருத்துகள்